Sivakamiyin Sabatham - Kalki

Sivakamiyin Sabatham

By Kalki

  • Release Date: 2021-01-02
  • Genre: European History

Description

புதினங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சமூக பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று, வரலாற்று பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. இதில் உண்மையான நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் சரித்திர நூல்களுக்கு எப்பொழுதுமே வரவேற்பு உண்டு.

வரலாற்று பெருங்கதைகளை எழுதுபவர்களுக்கு ஆழ்ந்த சரித்திர ஞானம், கற்பனைத்திறன், சொல்வளம் ஆகியவை இருப்பது அவசியம். அமரர் கல்கி இத்தகைய புதினங்களை படைப்பதில் வல்லவர். பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நெடுங்கதைகள் அவரது ஒப்பற்ற திறமைக்கு எடுத்துக்காட்டுகள். அவரின் படைப்புகளை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. அதனால்தான் மீண்டும் மீண்டும் பத்திரிகைகளில் தொடர்களாகவும், பதிப்பகங்களில் புத்தகங்களாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வரிசையில் ‘சிவகாமியின் சபதம்’ எனும் இப்புத்தகமும் ஒப்பற்ற ஒரு வரலாற்று காவியம்.

இப்புத்தகத்தில் மகேந்திரவர்ம பல்லவர், மாமல்லர் நரசிம்மர், இலங்கை மானவர்மன், புலிகேசி, திருநாவுக்கரசு சுவாமிகள், பரஞ்ஜோதி போன்ற உண்மையான கதாபாத்திரங்களும், சமணராக இருந்த மகேந்திரர், திருநாவுக்கரசர் அருளால் சைவராக்கப்பட்டதும், மாமல்லரின் போர் திறமை, வாதாபி புலிகேசி காஞ்சிக்கு படையெடுத்தது, சேனாதிபதி பரஞ்ஜோதி வாதாபியை வென்று திரும்பி, பிறகு, பணியிலிருந்து விலகி சிவனடியார் தொண்டினில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டு, பிற்காலத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனராக ஆனது என்று அவர்களுடன் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளுக்கும் ஆதாரமிருக்கிறது.
இன்றளவும் மாமல்லபுரத்து கடற்கரை சிற்பங்களைப் பார்க்கும் பொழுது, “இங்கு தானே மகேந்திரவர்ம பல்லவர் நின்று கொண்டு சிற்பங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்! இங்குதானே சிற்பிகளின் உளிகள் ஓயாமல் நர்த்தனமிட்டு காலத்தால் அழியாத அரிய சிற்பங்களைப் படைத்தன!” என்றெல்லாம் அக்கால நினைவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

இத்தகைய உண்மையான நிகழ்வுகளோடு கற்பனை விஷயத்தையும், சரிவிகிதத்தில் சேர்த்து சிறிதும் சுவை குன்றாமல் அளித்திருக்கும் அமரர் கல்கியின் இந்த படைப்பினை எத்தனை முறை படித்தாலும் இனிக்கும்.