Ponniyin Selvan - Kalki

Ponniyin Selvan

By Kalki

  • Release Date: 2021-01-02
  • Genre: Classics
Score: 5
5
From 5 Ratings

Description

புதினங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று சமகாலத்திய சமூக சூழ்நிலைகளைப் பின்னணியாக வைத்து முற்றிலும் கற்பனையான பாத்திரங்களை உருவாக்கி, அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்ப நிகழ்வுகளை படிப்போர் ரசிக்கும்படியாக விவரிப்பது. பல திருப்பங்கள், முடிச்சுகள் கொண்ட இவை, சமூக நாவல்கள் எனப்படும். இரண்டாவது வகை, நாட்டு வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் மாந்தர்களை கதாபாத்திரங்கள் ஆக்கி வரலாற்று நிகழ்ச்சிகள், கற்பனைச் சம்பவங்கள்-மனிதர்களைச் சேர்த்து எழுதப்படுவது. இவை வரலாற்றுப் புதினங்கள். இவற்றின் முக்கிய நாயகர்கள் - நாயகியர்களின் பெயர்களை வாசகர்கள் முன்பே அறிந்திருப்பார்கள். வரலாற்றுப் பெருங்கதைகளை எழுதுபவர்களுக்கு கற்பனைத் திறன், சொல் வளம், ஆழ்ந்த சரித்திர ஞானம் ஆகியவை இருப்பது அவசியம். தமிழ்மொழியில் சமகாலத்துச் சமூக நாவல்களை வாசகர் விரும்பி படிப்பதற்கு ஏற்றவகையில் எழுதுபவர்கள் நிறைய உள்ளனர். ஆனால் உண்மையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட புதினங்களை எழுதுவோர் மிகக் குறைவே. அமரர் கல்கி, சமகாலத்திய சூழ்நிலைகள், சரித்திர நிகழ்வுகள் ஆகிய இரண்டு வகையான அடிப்படையிலும் புதினங்கள் படைப்பதில் வல்லவர். தியாக பூமி, கள்வனின் காதலி, அலை ஓசை போன்றவற்றை சமகாலப் பின்னணியில் சமூகப் புதினங்களை எழுதுவதில் கல்கிக்கு இருந்த திறமைக்கு சான்றாகக் கொள்ளலாம். அதே போல் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகியவை சரித்திர நெடுங்கதைகளை எழுதுவதில் அவருக்கிருந்த ஒப்பற்ற திறமைக்கு எடுத்துக்காட்டுகள். கல்கியின் படைப்புகளை எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது, சலிக்காது. ஆகவே தான் அவை மீண்டும் மீண்டும் பத்திரிகைகளில் தொடராக வருவதோடு புத்தகங்களாகவும் வெளியிடப்படுகின்றன. முத்தமிழ் நிலமான தமிழகத்தின் வரலாற்றில் மூவேந்தர்களுக்கு தனிச்சிறப்பிடம் உண்டு. தஞ்சையில் பெரிய கோயில் எழுப்பி தமிழர் கலாச்சாரத்தின் மேன்மையை உலகெங்கும் அறியப் பறைசாற்றியவன் ராஜராஜ சோழன். அம்மாமன்னன் அரியணை ஏறுவதற்கு முன் அருள்மொழிவர்மன் என்ற பெயரோடு சோழ இளவரசனாக இருந்த காலத்தில் நாட்டில் நிலவிய சூழ்நிலைகளைப் பின்னணியாக வைத்து கல்கி வரைந்த அற்புதமான எழுத்தோவியமே பொன்னியின் செல்வன். சுந்தர சோழ சக்கரவர்த்தி, அவரது மூத்த மகன் பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலன், மகள் குந்தவை, அவளைக் காதலித்து கரம் பிடித்த வாணர் குலத்து வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன், சோழ சாம்ராஜ்யத்திற்கு தோள் கொடுத்து தாங்கி நின்ற பழுவேட்டரையர்கள், தஞ்சை அரியணையில் சிறிது காலம் அமர்ந்திருந்த மதுராந்தக உத்தம சோழன் ஆகியோருடன் தன் கற்பனையால் உருவாக்கிய நந்தினி போன்ற பாத்திரங்களையும் சேர்த்து கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வனை’ எத்தனை முறை படித்தாலும் இனிக்கும்.